கடலில் முழ்கும் ஆபத்து

image

இன்னும் 90 ஆண்டில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக விஞ்ஞான தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சுற்றுச்சூழல் மாற்றம் அமைப்பு 2007-ம் ஆண்டு உலக வெப்ப மயத்தால் ஏற்படும் மாற்றம் குறித்து ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டது.

அதில் இந்த நூற்றாண்டு முடிவில் கடல் நீர்மட்டம் 18 சென்டி மீட்டரில் இருந்து 59 சென்டி மீட்டர் வரை உயரும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் முன்பு குறிப்பிட்டதை விட கடல் மட்டம் அதிக அளவில் உயரும் என்று இப்போது வெளி வந்துள்ள ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அண்டார்டிகா விஞ்ஞான ஆராய்ச்சி குழு என்ற அமைப்பு புதிய ஆய்வை நடத்தியது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 180 விஞ்ஞானிகள் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் ஆய்வை முடித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.அதில் கூறி இருப்பதாவது:-

இந்த நூற்றாண்டு முடியும் காலமான 2099-ம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 மீட்டர் (4 அடிக்கு மேல்) உயரும்.

இதனால் குறைந்த உயரம் கொண்ட பல்வேறு தீவுகள் கடலுக்குள் மூழ்கி விடும். மாலத்தீவு போன்ற நாடுகளில் 2100-ம் ஆண்டு மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் கடல் நீர் சூழ்ந்து விடும். பல தீவுகளிலும் உள்ள மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

தீவுகள் மட்டும் அல்ல பல கடலோர நகரங்களுக்கும் ஆபத்து ஏற்படும். இந்திய தீபகற்ப பகுதியில் உள்ள நகரங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து நேரிடலாம்.

இந்த பகுதிகளில் 1 மீட்டர் உயரம் வரை கடல் நீர் மட்டம் அதிகரிக்கும். எனவே கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தற்போதைய நிலையில் இருந்து 1 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிக்கு குடியேற வேண்டிய கட்டாய நிலை உருவாகும்.

அண்டார்டிகா, கிரீன்லாந்து பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. எனவே தான் எதிர்பார்த்ததை விட கடல் நீர் மட்டம் அதிகரித்தப்படி உள்ளது.

அண்டார்டிகா பகுதியில் அடர்த்தியாக இருந்த பனிக்கட்டிகள் இப்போது தடிமன் குறைந்து காணப்படுகின்றன. 90 சதவீதம் பனிக்கட்டிகளில் இந்த பாதிப்பு காணப்படுகிறது. மத்திய அண்டார்டிகா பகுதியில் இது வரை பாதிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அங்கும் பனிக்கட்டிகள் உருக தொடங்கி இருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடல் நீர்மட்டம் 1870-ம் ஆண்டில் இருந்தே உயரத் தொடங்கி இதுவரை 20 சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 1.7மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்தது.

இப்போது ஆண்டுக்கு 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்து வருகிறது